தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். தொடர்ந்து தற்போது நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய் சேகர் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் கடந்த(2022) ஆண்டு வெளிவந்தன.
அடுத்ததாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சீரியசான கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கும் திரைப்படம் சட்டம் என் கையில். சமீபத்தில் சட்டம் என் கையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்து கவனத்தை ஈர்த்தது. இந்த வரிசையில் அடுத்து நடிகர் சதீஷ் முன்னணி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பூஜை இன்று (ஜனவரி 18) நடைபெற்றது.
வைட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 3வது படைப்பாக தயாராகும் இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அசோசியேட் இயக்குனராக மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் பணியாற்றிய இயக்குனர் வெங்கி தனது முதல் படமாக இயக்குகிறார். பிளாக் காமெடி திரைப்படமாக தயாராகும் இப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து அறிமுக நடிகை சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், ரமேஷ் திலக், ஜான்விஜய், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படப்பூஜை நிறைவடைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது, நடிகர் விஜய் இளைய தளபதியிலிருந்து தளபதி என பெயரை மாற்றியது குறித்து சுவாரஸ்ய தகவலை சதீஷ் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசியபோது,
“கத்தி படப்பிடிப்பில் இருக்கும் போது என்னிடம் விஜய் சார் கேட்டார், “நான் இளைய தளபதி என்பதை எடுத்து விட்டு தளபதி என வைக்கலாம் என இருக்கிறேன்.” என்றார். நான் சொன்னேன் ஏன் சார் என்றேன், “இல்லப்பா நமக்கும் வயதாவது தெரிகிறது அல்லவா” என்றார். நான் சொன்னேன் “சார் உங்கள் தோற்றத்திற்கு இளைய தளபதி என்று இன்னும் 60 வயது வரைக்கும் கூட வைத்துக் கொள்ளலாம்” ஆனால் அதை மீறி அவருடைய மனதில் இருந்தது அதையே தான் வைத்திருந்தார்”
என தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோ இதோ…