உலகநாயகன் கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது மாமன்னன் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறகு எழுந்த சர்ச்சைகள் குறித்து நடிகர் சதீஷ் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சதீஷ். முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடன் இணைந்து காமெடிகள் கலக்கிய சதீஷ் தற்போது நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தற்போது கதையின் நாயகனாகவும் குறிப்பிடப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சதீஷ் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த நாய் சேகர் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் சதீஷ் நடித்திருந்தார். இந்த வரிசையில் அடுத்ததாக தனது நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் சட்டம் என் கையில் எனும் திரைப்படத்தில் தற்போது சதீஷ் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் சோசியட் இயக்குனரான இயக்குனர் வெங்கி இயக்கத்தில் உருவாகும் வித்தைகாரன் திரைப்படத்திலும் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சதீஷ் அவர்களிடம் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அவை அனைத்திற்கும் சதீஷ் பதில் அளித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படமாக வரும் ஜூன் 29ஆம் தேதி ரிலீசாக இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் முன்னிலையில் அவரது தேவர் மகன் திரைப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் பேசியது அதன் பின்னர் தற்போது வரை சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டு எக்கச்சக்கமான விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது இது குறித்து சதீஷ் அவர்களிடம் கேட்டபோது,

"இதை நான் பார்வையாளனாக மட்டுமே பார்க்கிறேன். தேவர் மகன் படமும் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதே தான் அந்தப் படத்தின் இறுதியிலும் வன்முறை வேண்டாம்.. எல்லோரும் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற ஒரு நல்ல கருத்து தான் அந்த படத்தில் இருக்கும். ஜாதி, மதம் எல்லாம் பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற அந்த கருத்தை தான் நான் எடுத்துக் கொள்கிறேன். அது ஒரு பெரிய ஹிட் திரைப்படம் அதைப்பற்றி நான் என்ன பேசுவது..." என்றார். தொடர்ந்து இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதம் பற்றி கேட்டபோது, "எனக்கு அந்த கடிதத்தை எழுதவில்லை அதனால் நான் அந்த கடிதத்தை படிக்கவில்லை. அந்த கடிதத்தை படிக்கவில்லை ஆனால் அவர் பேசியதை பார்த்தேன்... நான் அதிலிருந்து இந்த கருத்தை எடுத்துக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் இருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன்." என பதிலளித்து இருக்கிறார். நடிகர் சதீஷின் அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.