இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021 ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. குத்துச்சண்டை கதைகளத்தில் உருவான இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருப்பார். மேலும் இவர்களுடன் பசுபதி, ஜான் கொக்கேன், ஷபீர், வேட்டை முத்துக்குமார், ஜான் விஜய், கலையரசன், அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். வடசென்னை நிலப்பரப்பில் குத்துச்சண்டை கதைகளத்தில் உருவான சர்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வெற்றி திரைப்படமாக கொண்டாட்டபட்டது.
மேலும் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் சியான் - விக்ரம் கூட்டணியில் இயக்கி வரும் தங்கலான் படத்திற்கு பின் சார்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான வேலைகளிலும் தற்போது ரஞ்சித் இறங்கியுள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரையின் கடைசி குத்துசண்டை வீரன் பாக்ஸர் ஆறுமுகம் உடல்நிலைகுறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
வடசென்னையில் 1980 காலகட்டத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டிகளில் சார்பட்டா பரம்பரைக்காக விளையாடியவர் ஆறுமுகம். திறமையான் ஆட்டத்தினால் சிறந்த வீரராக வலம் வந்தார். குத்துச்சண்டையில் பல வகை யுக்திகளை கற்றுத்தேர்ந்த இவர், எதிர் அணியில் விளையாடும் பெரும்பாலனாவரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்துவதை வழக்கமாக கொண்டவர், இதனாலேயே இவர் மக்களால் ‘நாக்-அவுட் கிங்’ என அழைக்கப்பட்டார்.
ஆறுமுகம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு பாதுகாவலராக இருந்து வந்ததாக தகவல். மேலும் இவர் திரைத்துறையில் தண்ணில கண்டம், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படம் இயக்குவதற்கு முன்பு குத்து சண்டை மற்றும் பரம்பரை குறித்த பல தகவல்களுக்கு ஆறுமுகம் உதவியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் சமீப காலமாக மூச்சு திணறல் காரணமாக அவதி பட்டு வந்த ஆறுமுகம் பாஸ்கர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமணையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதையடுத்து நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்துள்ளார். இவரே சார்பட்டா பரம்பரையின் கடைசி வீரன் என்று அப்பகுதியில் சொல்லப் பட்டு வருகிறது. இவரது மறைவிற்கு ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் அவர்கள் பாக்ஸர் ஆறுமுகம் அவரது மறைவை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “1976-ல் காசிமேட்டில் அவருடன் பயிற்சி பெற்றதும் பழகியதும் அழியா நினைவுகளய் மனதில் ஆழ பதிந்துள்ளன! வடசென்னைக்கு அவர் பெருமை மட்டுமன்றி ஒரு கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் சென்றவர். அவர் இன்று இல்லையென்றாலும் கலையின் வடிவமாய் வாழ்கிறார்! வாழ்வார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.