தமிழ் சினிமாவின் பிரபல பாடகர்களில் ஒருவராக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வரும் பாடகி தீ மெட்ராஸ் படத்தின் நான் நீ, இறுதிசுற்று படத்தின் ஏய் சண்டக்காரா, மாரி 2 படத்தின் ரவுடி பேபி, சூரரைப்போற்று படத்தின் காட்டு பயலே, ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட உள்ளிட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தெருக்குரல் அறிவு உடன் இணைந்து தீ பாடி வெளிவந்த என்ஜாய் என்ஜாமி வேற லெவல் ட்ரெண்டாகி உலக அளவில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் என்ஜாய் என்ஜாமி பாடலை தீ பாடினார்.
தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இந்திய பிரதமர் அவர்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீ மற்றும் கிடாய்குழி மாரியம்மாள் இருவரும் இப்பாடலை பாடினர். என்ஜாய் என்ஜாமி பாடலின் மிக முக்கிய அம்சமாக பாடலை எழுதி பாடிய தெருக்குரல் அறிவு இதில் கலந்து கொள்ளாதது பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த நிகழ்வு பல சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு தனது சமூக வலைத்தள பக்கத்தில் "நீங்கள் உறங்கும் பொழுது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரித்துக் கொள்ளலாம் விழித்திருக்கும்போது ஒன்றும் நடக்காது. ஜெய்பீம்… இறுதியில் உண்மையே வெல்லும்" என குறிப்பிட்டு பதிவிட இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேற்று (ஆகஸ்ட் 1)நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.குறிப்பாக அதில், மேற்கொண்டு இந்த சர்ச்சை குறித்து தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடகி தீ தற்போது என்ஜாய் என்ஜாமி பாடல் சர்ச்சை குறித்து விளக்கமளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என்ஜாய் என்ஜாய் பாடல் தயாரிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரையிலான நடைபெற்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் மிக விளக்கமாக தீ இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாடகி தீயின் அந்த அறிக்கை இதோ…
Please read it fully when you get the time 🙏🏽💕 pic.twitter.com/RkcccT3wps
— Dhee (@talktodhee) August 1, 2022