தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் பல ஆண்டுகளாக ரசிகர்களை தன் தனித்துவமான இசையினால் வசீகரித்து வருகிறார். உச்சபட்ச நடிகரின் திரைப்படம் என்றாலும் புது முக நடிகர் என்றாலும் யுவனின் இசை என்றும் தனித்துவம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் – யுவன், சிம்பு – யுவன், வெங்கட் பிரபு – யுவன், செல்வராகவன் – யுவன், என்று வெற்றி கூட்டணியை பட்டியலிட்டு கொண்டே போகலாம். கடந்த ஆண்டு இவரது இசையில் 11 திரைப்படங்கள் வெளியாகின. இதில் பெரும்பாலும் ஆல்பம் ஹிட் என்றே சொல்லலாம். குறிப்பாக நானே வருவேன், லவ் டுடே, விருமன் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது. தற்போது யுவன் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’, அமீர் இயக்கத்தில் உருவாகும் ‘இறைவன் மிக பெரியவன்’ மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தையே கொண்டு திரையுலகில் லிட்டில் மேஸ்ட்ரோவாக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில். “எனது அடுத்த பெரிய படத்திற்கு முக்கியமான பாடலுக்கு ஒரு இசையமைப்பாளருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. அந்த கூட்டணியில் யார் இருக்கலாம் என்று சொல்லுங்கள், அதை நடத்தி காட்டுவோம்.. “ என்று ரசிகர்களிடம் கேட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் பதிவு வைரலாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப இசையமைப்பாளர்களின் பெயர்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் யுவன் குறிப்பிட்ட பெரிய படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 ஆக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பதிவினை பகிர்ந்து “இதோ வந்துட்டேன்” என்று குறிப்பிட்டு ‘வேல்’ படத்தின் வடிவேலு காட்சியை பதிவிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். இதையடுத்து ரசிகர்களால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பதிவு வைரலாகி வருகிறது.
Idho Kelambitten 😜 https://t.co/zo34jrIrxf pic.twitter.com/U1SsvHo2BZ
— Santhosh Narayanan (@Music_Santhosh) July 27, 2023
பொதுவாகவே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தீவிர யுவன் ஷங்கர் ராஜா ரசிகர். இதனை பல மேடைகளில் முன்னதாக பேசியுள்ளார். இதையடுத்து தற்போது யுவனின் அட்டகாசமான கூட்டணி தேடுதலில் ரசிகர்களுடன் ரசிகராய் களமிறங்கியது இணையத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது.
தென்னிந்தாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவாராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை’ , கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா 2’ மற்றும் பான் இந்திய திரைப்படமான ‘கல்கி AD 2898’ ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.