தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஸ்டைலில் காமெடியில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் அசத்தி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்கிய சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் குளுகுளு மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்கான ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட திரைப்படங்கள் சந்தானம் நடிப்பில் வெளிவந்தன.

அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து வரும் சந்தானம் முன்னதாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் கிக் திரைப்படம் விரைவில் ரிலீஸாக காத்திருக்கிறது. இதனிடையே சந்தானத்தின் பக்கா காமெடி ட்ரீட்டாக நேற்று ஜூலை 28ம் தேதி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் DD ரிட்டர்ன்ஸ். நடிகர் சந்தானத்தின் முந்தைய படங்களான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களின் வரிசையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஹாரர் காமெடி படமாக வெளிவந்திருக்கும் இந்த DD ரிட்டன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்தப்படியே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சந்தானம் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சந்தானம் கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நம்முடைய பல சுவாரசியமான கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளித்தார். அப்படிப் பேசும் போது, “பேய் மீது உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம்? எப்போது பார்த்தாலும் போகிற போக்கில் பேயை கிண்டல் செய்து டேமேஜ் செய்து விடுகிறீர்கள்” எனக் கேட்டபோது,

“இல்லை பேய் படம் என்றாலே இப்போது சின்ன வயதில் 13ம் நம்பர் வீடு படம் பார்த்தாலும் இல்லை வேறு ஏதாவது ஒரு பேய் படம் பார்த்தாலோ பாத்ரூம் போக ஒரு பத்து பேரை எழுப்புவேன். அவ்வளவு பயப்படுவேன் இனி வரக்கூடிய தலைமுறைகள் அந்த பேய் என்றால் எந்த ஒரு பயமும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் அதேபோல பேய் படம் என்றால் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்கிற ஒரு கான்செப்ட்காக தான் இந்த மாதிரி கலாய்ச்சலாக காமெடியோடு சேர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். இனிவரும் தலைமுறையில் குழந்தைகள் எல்லாம் பெரியோர்களாகும் போது இனி இந்த பேய் பயம் எல்லாம் இல்லாமல், இங்கிருந்து அங்கே போக வேண்டும் என்றால் கூட தனியாக போக வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகள் இந்த ரூமில் இருந்து அந்த ரூமுக்கு போக வேண்டும் என்றால் கூட சில நேரங்களில் பயப்படுகிறார்கள். அது எல்லாம் இருக்கக் கூடாது நம்மால் முடிந்தது ஜாலியாக ஒரு படம் காட்டுவோம் என்பது தான்.” என பதில் அளித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.