எதார்த்தமான டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்து வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் மட்டும் சந்தானம் காமெடியனாக நடித்தார். ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிக்கவும் செய்தார். தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.
யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சந்தானத்தின் 3 கதாபாத்திரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலரில் டைம் ட்ராவல் செய்து தனது திருமணத்தை நிறுத்த போவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த ட்ரைலர் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது.
இந்த படம் தவிர்த்து பிஸ்கோத் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரும் வெளியானது. மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கிறார். இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.