தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’. மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிய இப்படத்தினை ருத்ரமாதேவி பட இயக்குனர் குணசேகரன் இயக்கினார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இவருடன் தேவ் மோகன், அல்லு அர்ஹா, சச்சின் கேட்கர், கபீர் பேடி, மோகன் பாபு, கௌதமி உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தெலுங்கு, தமிழ்,இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாகவும் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் முதல் நாள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். ஆனால் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த திருப்தியை கொடுக்காததால் அனைத்து மொழிகளிலும் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. வசூலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது என்று இப்படத்தின் விநியோகஸ்தர் தில் ராஜு ஒரு பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வெளியான சில நாட்களிலே அமேசான் பிரைம் ஒடிடி தளத்திலும் இப்படம் வெளியானது
இந்நிலையில் கலவையான விமர்சனத்தையும் மோசமான வசூலையும் பெற்ற சாகுந்தலம் திரைப்படத்திற்கு கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கற்பனை திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படம் என்ற பிரிவுகளில் விருதினை சாகுந்தலம் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பினை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாட மறுபுறம் பலர் மோசமான திரைப்படத்திற்கு எப்படி இத்தனை பிரிவுகளில் விருது என்ற கேள்விகளை எழுப்பி டிரோல் செய்தும் வருகின்றனர். பலர் தற்போது பிரான்ஸில் நடைபெற்று முடிந்த 75 வருட பாரம்பரியம் மிக்க கேன்ஸ் திரைப்பட விழா (Festival de cannes) என்று நினைத்து சாகுந்தலம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தை கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் உண்மையிலே அது கேன்ஸ் திரைப்பட விழா இல்லை. இது மாதந்தோறும் நடைபெறும் கேன்ஸ் உலக திரைப்பட விருது விழா (Cannes World Film Festival) என்ற விழாவில் கிடைக்கப்பட்ட விருது விழா என்பது குறிபிடத்தக்கது.இது போன்ற விளக்கங்களும் விமர்சிப்பவருக்கு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் சமந்தா தற்போது பிரபல ஆங்கில தொடரான சிடாடேல் இந்தியா வெர்ஷனில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.