கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து ரசிகர்கள் மத்தியில் சின்னத்தளபதியாக உயர்ந்து நிற்கிறார். சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.
பிரபு தேவா இயக்கத்தில் பரத் நடிக்கும் திரைப்படம் ராதே. இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கிறார் பரத். சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜாக்கி ஷ்ராஃப், திஷா படானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் பரத் கலந்துகொள்கிறார். மும்பை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பரத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அறிவித்த லாக்டவுனில் ரசிகர்களுடன் தனது திரைப்பயணம் பற்றி பகிர்ந்து வந்தார். படப்பிடிப்பில் ஏதும் கலந்து கொள்ளாமல் பாடல் பாடி, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் பரத். சமீபத்தில் பரத் நடிப்பில் டைம் என்ன பாஸ் வெப்சீரிஸ் வெளியானது.
அமேசான் ப்ரைம் வழங்கிய இந்த வெப் சீரிஸில் பிரியா பவானி ஷங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர், ஸ்டாண்ட்-அப் காமெடியன் அலெக்ஸ், சஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர். டைம் ட்ராவல் செய்யும் ரூம்மேட்ஸிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு ஐடி ஊழியரின் கதை தான் இந்த டைம் என்ன பாஸ் வெப் சீரிஸின் கதைக்கரு.
பரத் நடிப்பில் நடுவன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும்.
Gearing up for the final schedule of #radhe !! Finally workmode. #shooting #mumbai #happy pic.twitter.com/yaTlwaWeYP
— bharath niwas (@bharathhere) September 27, 2020