கடந்த 1996-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர்.
சில நாட்கள் முன்பு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவி உலகையே வாட்டி வதைக்கிறது.
லாக்டவுன் காரணமாக திரைத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் பல திரைப்படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்கான எடிட்டிங் பணிகளை இயக்குனர் ஷங்கர் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவம் குறித்து இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், பிரபல நாளிதழின் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் இந்தியன் 2 படத்தில் நடித்த அனுபவம் மிகச் சிறப்பானதாக இருந்தது. என் தொழில் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக ஷங்கர், கமல்ஹாசன் போன்ற அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு துறையில் திறம்படச் செயல்படுபவர்கள் உங்களைச் சுற்றி இருக்கும்போது நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் விதம், ஒரு காட்சியை அணுகும் விதம், அதற்குத் தரும் அழகு என, எழுத்து வடிவில் இருக்கும்போது ஒரு விஷயம் இருக்கும். அதுவே படப்பிடிப்பில் மெருகேற்றப்பட்டு வேறொரு விஷயமாக மாறும். ஒரு நடிகையாக என்னைப் பற்றியும், எனது தொழில் பற்றியும் நிறைய கற்றேன். நாம் பணியாற்றும் நபர்களின் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதே அளவு அந்தத் திறன் நமக்கும் ஒட்டும் என்று பேசியுள்ளார்.
திரையுலகின் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தில் ரகுல் ப்ரீத்தின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் திரை விரும்பிகள்.