கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து நடிகராகவும் அவதாரம் எடுத்த திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது 22 ஆவது திரைப்படமாக தயாரித்த லவ் டுடே திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த நவம்பர் நான்காம் தேதி உலகெங்கும் தர இயங்குகளில் ரிலீஸான லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தை கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து இயக்குனர் லவ் டுடே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இதற்கு மேல் நான் என்ன கேட்பது! சூரியனுக்கு மிக அருகில் சென்றது போல் உணர்கிறேன்… என்னை கட்டி அணைத்தது. அந்தக் கண்கள்… அந்த சிரிப்பு… ஸ்டைல் மற்றும் அந்த அன்பு… என்ன ஒரு ஆளுமை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் லவ் டுடே படத்தை பார்த்து என்னை வாழ்த்தியுள்ளார். நீங்கள் சொன்ன வார்த்தைகளை எப்போதும் மறக்கவே முடியாது சார்” என பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தோடு பிரதீப் ரங்கநாதன் பதிவிட்ட அந்த ட்விட்டர் பதிவு இதோ…