தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் அனைத்து ரசிகர்களும் விரும்பும் அட்டகாசமான நடன இயக்குனராகவும் பக்கா மாஸ் ஹீரோவாகவும் திகழும் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காஞ்சனா 3. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இந்த 2023 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து வரிசையாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ருத்ரன் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தின் டிரைலர் பக்கா ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களை கவரும் என சொல்லும் அளவிற்கு பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது ருத்ரன் திரைப்படத்தின் அடுத்த பாடலாக ஜொர்த்தால பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஜொர்த்தால எனும் கானா பாடல் ருத்ரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. OFRO இசையமைத்துள்ள இந்த பாடலை பிக் பாஸ் அசல் கோளார் எழுத, OFRO, அசல் கோளார் & MC விக்கி இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் ராகவா லாரன்ஸின் துள்ளலான நடனத்தில் இந்த ஜொர்த்தால பாடல் தற்போது வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த பாடல் இதோ…