வருகிற விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீசாக இருந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன் உழைப்பாளி மன்னன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அந்த வரிசையில் பாபா திரைப்படத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த சந்திரமுகி படத்தையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் அசைக்க முடியாத சாதனை படைத்து உச்சத்தில் சந்திரமுகி படம் இருக்கிறது. இமாலய வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது தயாராகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களில் இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட VFX மற்றும் இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த இறுதி கட்டப் பணிகள் இன்னும் நிறையவடையாத காரணத்தினால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்திரமுகி 2 திரைப்படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் கொஞ்சம் தாமதமாவதால் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. வேட்டையன் & சந்திரமுகி இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ரோஷமாக வருவார்கள். எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ட்ரீட் உடன் உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறோம்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸின் அந்த அறிவிப்பு இதோ…