நடன கலைஞராக அறிமுகமாகி நடன இயக்குனர் இயக்குனர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருபவர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படம் நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக உலகெங்கும் தர இயங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக களமிறங்கி இருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்த சரத்குமார் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ருத்ரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கான கல்விச் செலவையும் முழுவதும் ஏற்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ருத்ரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி கடைநிலையில் வேலை பார்க்கும் சிறந்த பணியாளர்களை மேடைக்கு அழைத்து தங்க மோதிரம் பரிசளித்தார்.
இந்நிலையில் தற்போது நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் அப்படி சிறந்த பணியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவித்தது குறித்த காரணங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “நல்ல வேலைக்காரர்களை கஷ்டப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுபவர்களை நான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் பார்த்துக் கொண்டே இருப்பேன். யார் நிஜத்தில் வேலை பார்க்கிறார்கள் யார் நம்மை பார்த்ததும் வேலை செய்வது போல் நடிக்கிறார்கள் என்பது தெரியும். அப்படி கடினமாக உழைப்பவர்களை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் அப்படி பார்க்கும்போது எல்லா பட விழாக்களிலும் மேடையில் பேசும்போது நடிகர் நடிகைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது, இயக்குனருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது, ஆனால் இந்த உழைப்பாளிகள் எங்கோ ஒரு மூலையில் நின்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது ஒரு உதவி இயக்குனராக இருக்கலாம் அல்லது நமக்கு காபி கொடுத்த ஒருவனாக இருக்கலாம். ஒரு படம் வென்றாலும் தோற்றாலும் அவனுடைய கடின உழைப்பு இருக்கிறது. எனவே படம் வெற்றி பெறுகிறதோ தோற்கிறதோ அதற்கு முன்பே அவர்களது அந்த கடின உழைப்பை மரியாதையை கொடுக்க வேண்டும் என ருத்ரன் படத்தில் நான் நினைத்தேன். ஒரு ஐந்து பேரை தேர்ந்தெடுத்து மேடையில் அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்க மோதிரம் பரிசளித்தேன். நான் விழாவின்போது மூன்று தான் வைத்திருந்தேன். இருவர் விழாவிற்கு வர முடியாது என முன்பே தெரிவித்து இருந்தார்கள். ஆனால் விழாவிற்கு வந்து விட்டார்கள். அவர்களுக்கு தனியாக கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். நான் நினைத்த ஒரு நபருக்கு என்னால் அன்று மோதிரம் போட முடியவில்லை. எனவே இந்த தருணத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் வீட்டிலிருந்து வரும்போது வேறு ஒரு லாரன்ஸாக இருப்பேன் படப்பிடிப்பில் கேரவனுக்குள் சென்று வெளியில் வரும்போது வேறு ஒரு நபராக என்னை அனுப்புகிற என்னுடைய Make-Up Man கணேஷுக்கு கொடுக்கிறேன்" என சொன்னதும், கணேஷ் மேடைக்கு வந்தார். எல்லோருக்கும் ஒரு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ் மேக்அப் மேன் கணேஷ்க்கு மட்டும் இரண்டு மோதிரத்தை பரிசளித்தார். இது குறித்து, “என் மனைவி கூட கேட்டார் எல்லோருக்கும் ஒரு மோதிரம் கொடுத்தீர்கள் கணேஷுக்கு மட்டும் ஏன் இரண்டு மோதிரம் எனக் கேட்டார்” ஏனென்றால், நான் உள்ளே வரும்போது சாமியாராகவும் வெளியில் வரும்போது ஹீரோவாகும் என்னை மாற்றுவது இவர்தான், எனவே சாமியாருக்கு ஒரு மோதிரம் ஹீரோவிற்கு ஒரு மோதிரம் என இரண்டு மோதிரம் இவருக்கு” என்று இரண்டு மோதிரத்தை பரிசளித்தார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ராகவா லாரன்ஸின் இந்த அசத்தலான பேட்டி இதோ…