தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராகவும் ரஜினி உள்ளிட்ட மிக முக்கியமான நடிகர்களை இயக்கிய முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தவர் மனோ பாலா. உடல் நல குறைபாடு ஏற்பட்டு வீட்டிலே சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா மறைவு குறித்து, “நான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன், இன்று காலை தான் அவருக்கு போன் செய்து அவரை எங்கு சென்று பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன். அவரது மறைவு நம்பமுடியாத அதிர்ச்சி. அவருடன் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்., நாங்கள் இருவரும் ஒன்றாக நிறைய விஷங்களை கற்றுக்கொண்டோம், சிரித்தோம், சண்டையிட்டோம், ஒன்றாக சாப்பிட்டோம், பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடியுள்ளோம், அவர் ஒரு திறமையான நபர், எல்லா சூழ்நிலைகளுக்கும் என்னிடம் நன்றாகப் பழகினார். அவரை மிஸ் பண்ணுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை ராதிகா.
மனோபலாவும் நடிகர் ராதிகாவும் நீண்ட கால நண்பர்கள். இயக்குனராக மனோபாலா இருந்த போது அவருடைய பல படங்களில் கதாநாயகி ராதிகா தான். அதன்படி பிள்ளை நிலா, சிறை பறவை, ஊர் காவலன், தென்றல் சுடும், சிறகுகள் ஆகிய மனோ பாலா இயக்கிய படங்களில் ராதிகா நடித்துள்ளார். மேலும் 1989 ல் என் புருஷன் எனக்கு மட்டும் தான் என்ற மனோபாலா இயக்கிய தமிழ் திரைப்படத்தை இந்தியில் ரெமேக் செய்து அதிலும் ராதிகாவை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் மனோபாலா. இது மட்டுமல்லாமல் நடிகராக பல படங்களில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். இவர்களின் நட்பு பல தசாப்தங்கள் கடந்தும் தொடர்வது திரைத்துறையினர் பல நேரங்களில் வியந்து பார்த்துள்ளனர். இந்த சூழலில் நெருங்கிய நண்பரை இழந்து ராதிகாவின் இந்த உருக்கமான பதிவு இணையத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.