இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட கால கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னியின் செல்வனை திரை வடிவமாக்க படாதபாடு பட்டிருக்கிறார் மணிரத்னம். இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் ஒரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் பொன்னியின் செல்வன் குறித்த பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் அவருடன் பேசும் போது, இயக்குனர் மணிரத்தினம் கிட்டத்தட்ட ஒரு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குறித்த பணிகளில் இருந்து இருப்பார்... என சொன்ன போது,

“இல்லை இல்லை அதிகமாக இருக்கும்… உண்மையில் 1990-இல் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஒரு பேட்டி கல்கி இதழில் வெளியானது. “பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கப் போகிறோம் அதற்கு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தான் தகுதியானவர் இது குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்பது போன்று ஒரு இரண்டு பக்க செய்தி வெளியானது. அதை படித்த பிறகு தான் நான் பொன்னியின் செல்வன் என்ற நாவல் பற்றி கேள்விப்பட்டேன். அப்போது ஒருவரிடம் புத்தகத்தை கடன் வாங்கி அந்த புத்தகத்தை ஒரே வாரத்தில் படித்து முடித்து விட்டேன். அப்போது இருந்தே அவருக்கு இந்த படத்தை எடுக்க விருப்பம் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். 1998-இல் நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்த போது, பொன்னியின் செல்வன் குறித்து கேட்டேன், “தெரியவில்லை நடக்குமா என்று தெரியவில்லை.” என்றார். 2003-இல் ஒருமுறை அந்த கதையை எழுதி பார்த்து அதற்கு நடிகர் நடிகைகள் யாரெல்லாம் வைக்கலாம் என்பதெல்லாம் பார்த்து பின்னர் அதை அப்படியே விட்டு விட்டோம். ஆயுத எழுத்து படத்திற்கு முன்பாக இதை செய்தோம். 2007-ல் கமல்ஹாசன் அவர்களிடம் இணைந்த போது அவரிடமும் கேட்டேன், ஏனென்றால் அவரும் திட்டம் வைத்திருந்தார். “பொன்னியின் செல்வன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்டபோது, “இல்லை அது அதற்கென கதை சொல்வதில் ஒரு சில சவாலான விஷயங்களை வைத்திருக்கிறது.” என சொன்னார். 2010-ல் ஒரு பெரும் முயற்சி எடுத்தோம். அதுதான் என்னை இன்னும் நெருக்கமாக கொண்டு வந்தது. அப்போது ஜெயமோகன் அவர்கள் எழுத்தாளராக இணைந்தார். அவர் தஞ்சை தரிசனம் என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ஆறு நாட்கள் இந்த காவிரி பகுதி முழுக்க ஒரு பயணம் அழைத்துச் சென்றார். அது மிகவும் ஸ்பெஷலான ஒரு பயணம். பட்டீஸ்வரத்தில் ஆரம்பித்தோம் பழையாறை, வீராணம் எல்லாமே சென்றோம். பெரிய கோவிலுக்கு போனோம்… கங்கைகொண்ட சோழபுரம் போனோம்.. காவேரி போய் கடலில் சேரும் இடம் வரைக்கும் போனோம். அந்த ஆறு நாட்களும் பேசியது முழுக்க முழுக்க சோழ வரலாறு, பொன்னியின் செல்வன் அதை கல்கி எழுதும் போது நடந்த விஷயங்கள்... அது பற்றி தான் பேசினோம். ஆனால் அப்போதும் அந்த படம் தொடங்குவதற்கு கொஞ்சம் முன்னால் கைவிட்டோம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கிட்டத்தட்ட 30 வருடங்கள் எனக்கு தெரிந்தே அவர் இதை எடுக்க வேண்டும் என இருந்திருக்கிறார். கண்டிப்பாக அவர் முதல் முறை நாவலை படித்த போதே இதை சினிமாவாக மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கலாம். 2018ல் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகு வேறு ஒரு படம் செய்வதற்காக கொடைக்கானல் சென்று விட்டு திரும்பி வந்த போது என்னிடம் வந்து, “நாம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் பண்ணுகிறோம்.” என சொன்னார். “எதற்கு சார்?” என கேட்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. ஏனென்றால் அவர் என்னிடம் பொன்னியின் செல்வன் பண்ணலாமா என கேட்கவில்லை பண்ணுகிறோம் என சொல்லிவிட்டார்…” என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சிவா ஆனந்த் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.