தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் தயாரிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனராக தற்போது உயர்ந்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் படமாக இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியவர் தான் தயாரிப்பாளர் S.கதிரேசன். தனது 5 ஸ்டார் கிரியேஷன் சார்பில் தொடர்ந்து தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் தனது இரண்டாவது படமாக மீண்டும் வெற்றிமாறனுடன் கைகோர்த்தார். அந்த வகையில் 2வது முறை தனுஷ் - வெற்றிமாறன் - S.கதிரேசன் காம்பினேஷனில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதோடு தேசிய விருதுகளை குவித்து பலரது பாராட்டுகளையும் பெற்றது.

பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது இரண்டாவது படமாக இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படத்தை தயாரித்த S.கதிரேசன் அவர்கள் அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தொடர்ந்து மீண்டும் வரிசையாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, சமீபத்தில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தை தயாரித்த S.கதிரேசன் அவர்கள் அத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கினார். தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJசூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக தயாராகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் Sகதிரேசன் அவர்கள், இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் திரைக்கதை வசனத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பக்கா ஆக்சன் திரில்லர் படமாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதனிடையே ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர் S.கதிரேசன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டைரி. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த டைரி திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான சூப்பர் நேச்சுரல் ட்ரைலர் திரைப்படமாக வெளிவந்த டைரி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததோடு வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்த டைரி திரைப்படத்தை இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியிருந்தார். இந்த நிலையில் தனது தயாரிப்பில் 12 வது திரைப்படமாக தயாரிப்பாளர் S.கதிரேசன் தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தையும் டைரி படத்தின் இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தன்னுடைய முதல் படத்திலேயே மிரள வைக்கும் திரில்லர் அனுபவத்தை கொடுத்த திறமை மிக்க டைரி படத்தின் இயக்குனர் இன்னசி பாண்டியனுடன் அடுத்த படத்தில் 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் மீண்டும் இணைகிறது.” என புதிய போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…