1800- களின் காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட மிகவும் அழுத்தமான ஒரு கதை களத்தில் இதுவரை பேசப்படாத உண்மை சம்பவங்கள் குறித்து மிக தைரியமாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் பேசியிருக்கும் திரைப்படமாக வெளிவர இருக்கும் தங்கலான் திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இதுவரை இந்திய சினிமா கண்டிராத மிகவும் யதார்த்தமான அதேசமயம் மிரட்டலான பீரியட் ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த தங்கலான் திரைப்படத்தை உலக அளவில் 9க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் ஆஸ்கார் விருதுகள் உட்பட உயரிய விருது விழாக்களுக்கும் அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வகையில் இது குறித்து தற்போது மேலும் சில சுவாரசிய தகவல்களை தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தங்கலான் படம் குறித்து நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், சீயான் விக்ரம் அவர்களின் நடிப்பில் இருக்கும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நேர்மை உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு தங்கலான் திரைப்படத்திற்காக அவர் எக்கச்சக்கமான விருதுகளை பெறுவார் என பேசிய தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களிடம், தொடர்ந்து “தங்கலான் திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்புவதாக கேள்விப்பட்டோமே” எனக் கேட்ட போது, “எல்லா சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்புகிறோம். அடுத்த வருடம் முழுக்க விக்ரம் சார் திரைப்பட விழாக்களில் மிகவும் பிஸியாக இருப்பார். ஏனென்றால் எல்லா விருதுகளும் அவருக்கு அவருடைய கடின உழைப்புக்கு வரும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இயக்குனர் ரஞ்சித் ஆகட்டும், இசை ஆகட்டும் கேமரா ஆகட்டும் எல்லா துறைகளும் மற்ற நடிகர் நடிகைகள் பார்வதி பசுபதி என எல்லோரும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். ஸ்டண்ட் டைரக்ஷனில் இருந்து கலை இயக்கத்தில் இருந்து எல்லோரும் தங்களது தனித்துவமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் அவர்களும், இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் அவர்களும் முதல்முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் தான் இந்த தங்கலான். கதையின் நாயகனாக தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீயான் விக்ரம் உடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதர அறிவிப்புகள் விரைவில் தொடர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.