விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது சிலம்பரசன் கௌதம் மேனன் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் ப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சித்திக் நீரஜ் மாதவ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். பிரபல இளம் தெலுங்கு நடிகையான சித்தி இத்நானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு சித்தார்த்தா நுண்ணி ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடைசி கட்ட படப்பிடிப்பாக மும்பையில் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிலம்பரசனின் கெட்டப்புகள் குறித்தும் முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். தனது வீட்டில் நடிகர் சிலம்பரசன் புதிய தோற்றத்தில் கண்டு அசந்து போனதாக தெரிவித்த ஐசரி கணேஷ் அவர்கள் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு 5 கெட்டப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளில் சிலம்பரசன் நடித்துள்ளதாக தயாரிப்பாளர் அளித்துள்ள இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.