மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முக்கிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார். கடந்த நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். விரைவில் வீட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், உடல்நிலை தற்போது சீராக இல்லை என்றும் இன்னும் 14 நாட்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது, அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், விஜயகாந்த் அவர்கள் தற்போது நன்றாக இருப்பதாகவும் மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சைகளை முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவார் என்றும் தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் தேவையில்லாத செய்திகளை கேட்டு பதற்றப்பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அப்படி பேசுகையில்,
“தேமுதிக தொண்டர்களுக்கும் கேப்டன் மீது அன்பு வைத்திருக்கும் நல் உள்ளங்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை வழக்கமான ஒரு அறிக்கை தானே தவிர, அதற்கு பதற்றப்படவோ பயப்படவோ அதில் ஒன்றும் இல்லை. கேப்டன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்ல முறையிலே இருக்கிறார். இங்க இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்கள் உடன் நானும் இங்கே இருந்து தலைவரை நல்லபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெகுவிரைவில் தலைவர் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உங்கள் அனைவரையும் நிச்சயம் சந்திப்பார் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை பேருடைய பிரார்த்தனைகளும் அவர் செய்த தர்மமும் அவரை நிச்சயம் காப்பாற்றும் எனவே கடைக்கோடியில் இருக்கும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் யாரும் பதற்றப்பட வேண்டாம். கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக தலைவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூரண குணமடைந்து நிச்சயம் விரைவில் வீடு திரும்புவார். அது எப்போது என்பதை விரைவில் நாங்களே தெரிவிக்கிறோம். அதுவரையில் யாரும் எந்தவிதமான வதந்திகளையோ செய்திகளையோ நம்ப வேண்டாம். தைரியமாக இருங்கள் தலைவர் “நல்லா இருக்காரு” விரைவில் தலைவர் வீடு திரும்புவார் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்!”
என தெரிவித்தார். திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசிய அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
நுரையீரல் பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட 12 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் இருக்கும் சூழலில் அவரது உடல்நிலை குறித்து வரும் தேவையற்ற மருந்துகள் எதையும் நம்ப வேண்டாம் என விஜயகாந்த் அவர்களின் தரப்பில் இருந்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படியே விரைவில் கேப்டன் அவர்கள் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.