மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் இறுதியாக மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமந்தா நடித்த யூ டர்ன் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஆதி தடகள வீரராக நடிக்கும் படம் கிளாப். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் வாயிலாக பிருத்வி ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வருடம் எளிய விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள நேர்த்தியான மற்றும் அழகான பகுதிகளில் படமாக்கப்பட்டது. ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிரபலமடைந்தவர் என்றாலும், முன்னணி நடிகைகளாக நடிக்கும் அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரும் உடற்பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கிளாப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பிரகாஷ் ராஜின் புகைப்படங்கள் இணையத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். கே.ஜி.எஃப், தலைவி, அக்னிச் சிறகுகள், வக்கீல் சாப் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.