தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற திரைக்கதை எழுத்தாளராகவும் நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மனதை கவர்ந்தவர் கிரேஸி மோகன். தனது மேடை நாடகங்கள் மூலமாக எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த கிரேஸி மோகன் அவர்களின் ஜுராசிக் பேபி, அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், சாக்லேட் கிருஷ்ணா, சேட்டிலைட் சாமியார் உள்ளிட்ட பல மேடை நாடகங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.
இதனை அடுத்து இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் களமிறங்கிய கிரேஸி மோகன், தொடர்ந்து முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் கதாநாயகன் படத்திற்கும் பணியாற்றினார். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல்.K.சம்பந்தம், வசூல்ராஜா, மன்மதன் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது வசனங்களும் அதில் இருக்கும் நகைச்சுவையும் காலம் கடந்தும் பேசும். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படமான அருணாச்சலம் திரைப்படத்திற்கும் கிரேசி மோகன் திரைக்கதை & வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகராகவும் பல திரைப்படங்களில் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் கிரேஸி மோகன் நடித்துள்ளார். மக்களின் மனம் கவர்ந்த வசனகர்த்தாவாக தனது ஒவ்வொரு வசனங்களாலும் திரைக்கதை ஆளும் மக்களை மகிழ்வித்த கிரேஸி மோகன் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் தற்போது கிரேஸி மோகன் அவர்களின் மனைவி நளினி கிரேஸி மோகன் அவர்கள் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து கிரேஸி மோகன் அவர்களின் நெருங்கிய நண்பரான உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி.நளினி கிரேசி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசனின் அந்த பதிவு இதோ…