பிஜு மேனன் மற்றும் பிரித்திவிராஜ் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான மலையாள திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். விமர்சன ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த பிளாக்பஸ்டர் படத்தை தற்போது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமீட்டுள்ளனர்.
இப்படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான சச்சி இந்த லாக்டவுனில் காலமானார். இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. ஜூன் 15-ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இயக்குனர் சச்சி உயிரிழந்தார்.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.
சசிகுமார் -ஆர்யா, சரத்குமார்- சிம்பு எனப் பலருடைய பெயர்கள் அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது, இந்த ரீமேக்கில் கார்த்தி - பார்த்திபன் இருவரும் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தி குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இச்செய்தி நற்செய்தி ஆகலாம்... ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனைத் தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே..இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் நடிக்க பார்த்திபனை யாரும் அணுகவில்லை என்பது தெளிவாகிறது.
கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருதார்கள். செல்வராகவன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதன் இரண்டாம் பாகமும் விரைவில் துவங்கும் என்று செல்வராகவன் கூறியிருந்தார்.
பார்த்திபன் கைவசம் துக்ளக் தர்பார் திரைப்படம் உள்ளது. டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதியுடன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷுட்டிங் சென்ற வருடமே பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.