மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ராணுவ வீரராக தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா, மலையாளத்தில் சல்யூட் மற்றும் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா இயக்கும் முதல் திரைப்படமாக தமிழில் ஹே சினாமிகா படத்திலும் நடித்து வரும் துல்கர் சல்மானின் குருப் திரைப்படம் உலகெங்கும் நாளை (நவம்பர் 12ஆம் தேதி) ரிலீசாகிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் குருப் படத்தை வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி என 5 மொழிகளில் வெளிவரும் குருப் படத்தில் துல்கருடன் இணைந்து டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஷபீடா துள்ளிபலா, சுரபி லக்ஷ்மி மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் குருப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் பரத்தின் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ...