தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. மிகபெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப் படுகிறார். தற்போது நயன்தாரா இந்தியில் ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்திலும் தமிழில் ஜெயம் ரவியின் இறைவன் படத்திலும் மற்றும் டெஸ்ட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் 9 ம் தேதி தனது காதலரும் தமிழ் திரையுலகின் இளம் இயக்குனருமான விக்னேஷ் சிவனை மனம் முடித்தார். சென்னை நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ல் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரௌடி தான்’ படத்திலிருந்து இருவரும் காதலித்து வந்தனர். நீண்ட வருட காதலர்களான இருந்த இவர்களின் திருமணம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அதன்படி கோலாகலாமாக குறிப்பிட்ட விருந்தினர் மற்றும் உறவினர் கொண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வரை கலந்து கொண்டு சிறப்பித்தனர். இருவரது திருமண விழாவும் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாரா தன் மகன்களுடன் (உயிர் ருத்ரோனில், உலக் தெய்வீக்) இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன்,
“என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே.. நிறைய தருணங்களுடன் இந்த ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. நிறைய ஏற்ற இறக்கங்கள், எதிர்பாராத தருணங்கள், சோதனை காலங்கள்.. ஆனால் வீட்டிற்கு வந்து அன்பு நிறைந்த ஆசிர்வதிக்கப் பட்ட குடும்பத்தை பார்க்கும் போது தனி நம்பிக்கை எழுகிறது. அது நிறைய உந்துதலை தருகிறது. என் கனவை லட்சியத்தை நோக்கி பயணிக்க அது உத்வேகம் தருகிறது.
நம் மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவருடன் அனைத்தையும் ஒன்றாக கடந்து செல்வோம். இந்த வலிமை அனைத்தும் எனது குடும்பங்களால் ஆனது. சிறந்த மனிதர்களை கொண்டுள்ளதில் நான் ஆசிர்வதிக்கப் பட்டவன். அவர்களுக்கு நலமான வாழ்வை அளிக்க என்னை போன்ற மனிதருக்கு தேவையானது உந்துதல்.” என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் தொடர்ந்து “எதிர்மறையான கமெண்ட்டுகளுக்கு அடிமையானவர்கள் மன்னிக்கவும் . நீங்கள் நல்ல விஷயங்களை புறக்கணியுங்கள்..” என்று பதிவிட்டுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் பதிவில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.