தமிழ் திரையுல தொழிலாளர் வாழ்வாதார நலன் கருதி தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தினர் (FEFSI) புதிய தீர்மானங்களை சமீபத்தில் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தில் தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலன் கருதி தமிழ்நாடு எல்லைக்குள் படபிடிப்பு நடத்த வேண்டும். திரைப்படத்திற்கு தேவை இருந்தால் மட்டும் மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். கதை உரிமைகளில் பிரச்னை ஏற்பட்டால் இயக்குனர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் படப்பிடிப்பு குறித்த காலத்தையும் பட்ஜெட்டையும் முன் கூட்டியே இயக்குனர்கள் முறையாக திட்டமிட வேண்டும் மேலும் தமிழ்நாடு தொழிலாளர்களையே படத்தின் வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல தீர்மானங்களை இயற்றினார். இந்த தீர்மானம் மிகப்பெரிய அளவு திரையுலகில் பேசு பொருளாக அமைந்தது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை இந்த தீர்மானத்திற்கு வரவேற்பை அளித்தனர்.

மேலும் ஒருபுறம் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தினர் (FEFSI) கொண்டு வந்த புதிய தீர்மானங்கள் தவறுதலாக புரிதல் ஏற்பட்டு தீர்மானம் குறித்த தவறான செய்திகளும் இணையத்தில் பரவியது. உதாரணமாக தமிழ் திரைப்படங்களில் மற்ற மொழி நடிகர்கள் நடிக்க கூடாது போன்ற தவறான செய்திகளும் பரவியது. தொடர்ந்து சரியான புரிதல் இல்லாமல் தீர்மானம் குறித்து ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரபல நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது.

மற்ற மொழி நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. ஒருவேளை அப்படி இருந்தால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். தற்போது நாம் பான் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் அதில் பிற மொழி நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டியுள்ளது. அதனால் தமிழ் படங்களில் பணியாற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை யாரும் போட மாட்டார்கள். தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, திரு செல்வமணி அவர்கள் சில தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் தமிழ்நாட்டு எல்லைக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை தான் பயன்படுத்த வேண்டும் போன்றவை.

இதெல்லாம் இங்கு சினிமாவை மட்டுமே நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்கள் நடிக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தமிழ் திரையுலகிற்கு நீண்ட பெருமைமிகு கலாச்சாரம் ஒன்று உள்ளது. பிற மொழிகளில் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது தமிழ் சினிமா. அதன்படி எஸ்வி ரங்காராவ் முதல் சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு பிரபலமாகி இருக்கின்றனர். அதனால் வதந்திகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது தவறான செய்தி. நாம் ஒன்றாக இணைந்து படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம். நம்மாள் முடியும் அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்” என நடிகர் நாசர் பேசி உள்ளார். தற்போது நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் பேசிய வீடியோ ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

முன்னாதாக சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி வெளியாகவுள்ள ‘ப்ரோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படத்தின் நாயகன் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தினரின் (FEFSI) புதிய தீர்மானங்கள் குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது. “மற்ற மொழி கலைஞர்கள் பணியாற்றுவதால் தான் இன்று தெலுங்கு திரையுலகம் செழிப்பாக உள்ளது. குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தையும் கொடுக்க முடியும். கலைஞர்களுக்கு சாதி, மதம் என எதுவும் கிடையாது. அதனால் தமிழ் சினிமாவில் தமிழ்க் கலைஞர்கள் மட்டுமே பங்கற்க வேண்டும் என்ற புதிய முடிவை பரிசீலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். விழாவில் பவன் கல்யாண் பேசியவை இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது என்பது குறிப்பிடதக்கது.