தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி இமான். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர் தொடர்ந்து தளபதி விஜய் தொடங்கி அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி என பல முன்னணி நட்சதிரங்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களில் ஒருவராவர். இவரது இசையில் வெளியான ‘கும்கி’, ‘ஜில்லா’, ‘விஸ்வாசம்’, ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற பல படங்களின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்ப பட்டியிலில் இருந்து வருகிறது. அஜித் குமார் நடிப்பில் கடந்த 2019 ல் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற பட்டியலில் தேசிய விருதை இமான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது இசையில் கடந்த ஆண்டு ‘எதற்கும் துணிந்தவன்’, ‘யுத்த சத்தம்’, ‘மை டியர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’, ‘கேப்டன்’, ‘காரி’, ‘டிஎஸ்பி’ ஆகிய 7 திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இந்த ஆண்டு இவரது இசையில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதை தொடர்ந்து இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் ‘மலை’, ‘பப்ளிக்’, ‘வள்ளி மயில்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தனது இசையின் மூலம் உருவாக்கி வைத்துள்ள டி இமான் அவர்கள் திரைத்துறையில் மட்டுமல்லாமல் பொது நல சேவையிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். அவரது பொது சேவை ஒவ்வொரு முறையும் ரசிகர்களை பெருமை பட வைத்து வருகிறது. ஆதரவற்ற பலருக்கு இமான் சத்தமின்றி பல உதவிகளை செய்து வருகிறார். அதன்படி தற்போது இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவன் ஒருவருக்கு செயற்கை கால் கொடுத்து மாணவனை மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
இது குறித்து பள்ளி மாணவனை சார்ந்தோர் இசையமைப்பாளர் டி இமானுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது இணையத்தில் வெளியான அந்த வீடியோ ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றது.
முன்னதாக தனுஷ் நடித்து வெளியான படிக்காதவன் போன்ற பல படங்களில் நடித்த துணை நடிகர் பிரபு உடல்நிலை மோசமடைந்து ஆதரவற்று இறந்தார். அவரது இறுதி சடங்கை இசையமைப்பாளர் டி இமான் முன்னின்று நடத்தி அவரை அடக்கம் செய்ததும் அதிகளவு பேசப்பட்டது. மேலும் சமீபத்தில் குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா என அனைவரையும் ஒரே விபத்தில் இழந்து தவித்து வரும் மாணவியின் (11ம் வகுப்பில் பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுத்தவர்) கல்வி உதவி குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த செய்தியை அறிந்த இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் மாணவிக்கு தர முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.