சின்னத்திரையில் துணை நடிகராக அறிமுகமாகி பின் சிறு சிறு நகைச்சுவை பாத்திரத்தை ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 'பன்னி மூஞ்சி வாயன்' என்று காமெடியில் பிரபலமான யோகி பாபு தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியிருப்பார். சில காலத்திலே முன்னணி நகைச்சுவை நடிகருக்கு போட்டியாக பல படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். பின் தொடர்ந்து படங்களில் அசத்தலான கவுண்டர்களை போட்டு மக்களை சிரிக்க வைத்த யோகி பாபு ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல நகைச்சுவை படங்களில் நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

அதேநேரத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கதைக்கு தேவையான பாத்திரத்தை வழங்கி நடித்து அசத்தி வருகிறார். அதன்படி 2021 ம் ஆண்டில் வெளியான 'மண்டேலா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்று தந்தது. சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படமும் யோகி பாபுவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் கதாநாயகனாக பல படங்களில் தற்போது நடித்து வரும் யோகிபாபு நகைச்சுவை நடிகராகவும் பல முன்னணி கதாநாயகனுடன் நடித்து வருகிறார்.‌ அதன்படி ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி அவர்கள் யோகி பாபுவிற்கு பரிசாக அவரது கையெழுத்திட்ட அவரது கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதனையடுத்து யோகி பாபு, எம்.எஸ் தோனிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இந்த கிரிக்கெட் பேட்டை வழங்கியதற்கு நன்றி! மிக்க மகிழ்ச்சி" என்று தெரிவித்து உள்ளார்.

யோகி பாபு அவ்வப்போது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி அதை வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கம்.‌ மேலும் தற்போது யோகி பாபு எம்.எஸ் தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எடுக்கப்படும் முதல் திரைப்படமான 'எல்.ஜி.எம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிக்கும் இப்படத்தின் படபூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.