பொதுவாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைப்பது அந்த படத்தின் பர்ஸ்ட்லுக்,ட்ரைலர் உள்ளிட்டவை தான் என தான் முதலில் இருந்து வந்தன.ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ட்ரைலர் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து விட்டால் ரசிகர்கள் படத்தினை பார்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவினரிடம் இருக்கும்.இதனை வைத்து தான் படக்குழுவினர் படத்தின் மார்க்கெட் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வார்கள்.
காலப்போக்கில் டெக்னாலஜி வளர ரசிகர்களை கவர பல புதிய யுக்திகளை படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர்.படத்திற்கு ஃபர்ஸ்ட்லுக் மட்டுமல்லால் செகண்ட் லுக் , கேரக்டர் போஸ்டர் , சிறப்பு போஸ்டர்கள் என அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருவார்கள்.அதேபோல ஒரு ட்ரைலர் வெளியாகி வந்த இடத்தில் படத்தின் மோஷன் போஸ்டர்,டீஸர்,ட்ரைலர்,ரிலீஸ் ப்ரோமோ என பல விதமான வீடியோ ப்ரோமோஷன் வித்தைகளையும் படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர்.
இந்த ப்ரோமோஷனல் விஷயங்கள் அந்த படத்தின் மீதான ஆர்வத்தையும் , எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்றும் விதமாக அமைய படக்குழுவினர் பல முக்கிய படங்களுக்கு தொடர்ந்து இந்த ப்ரோமோஷனல் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.
இது அடுத்து வரும் பெரிய படங்கள் அறிவிப்பில் இருந்தே ஆரம்பிக்க தொடங்கின,படத்தின் அறிவிப்பையே மோஷன் போஸ்டராக அல்லது படத்தின் டைட்டில் அறிவிப்பை மோஷன் போஸ்டராக வெளியிடும் ட்ரெண்ட் தொடங்கி சென்று வருகிறது.சமீபத்தில் வெளியான சூர்யா 42 படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.
மிக பிரம்மாண்டமாக உருவாகும் சூர்யா மற்றும் இயக்குனர் சிவாவின் சூர்யா 42 பட அறிவிப்பு மோஷன் போஸ்டராக வெளியாகி செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இது தமிழ் சினிமாவில் புதிதல்ல ,பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இதுபோல மோஷன் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.அவை என்னென்ன என்பது குறித்த ஒரு சிறப்பு பார்வை இதோ
பேட்ட
எந்திரன் படத்தினை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் உடன் இணையும் திரைப்படம் , ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் , அனிருத் இசையில் தயாரான இந்த படத்தில் விஜய்சேதுபதி , நவாஸுதீன் சித்திக்,த்ரிஷா,சிம்ரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பை மோஷன் போஸ்டராக படக்குழுவினர் வெளியிட்டனர்.அனிருத்தின் அசத்தலான இசையில் இந்த மோஷன் போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் Favourite ஆக இன்றும் இருப்பது நம்மால் பார்க்கமுடியும்.
கத்தி
துப்பாக்கி படத்தினை அடுத்து தளபதி விஜய் உடன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்த திரைப்படம் கத்தி.அறிவிப்பு முதலே பெரிய வரவேற்பு இருந்தது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டராக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.சென்னையின் முக்கிய இடங்கள் காட்டப்பட்டு விஜயின் முகம் கடைசியில் வருவது போல இருக்கும் இந்த மோஷன் போஸ்டர் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
விஸ்வாசம்
சில வருடங்களுக்கு பிறகு கிராமத்து கதையில் அஜித் நடிக்கிறார் என்றதுமே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டராக வெளியிடப்பட்டது.வேஷ்டி சட்டையில் செம மாஸாக இரண்டு லுக்களில் வரும் இந்த மோஷன் போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
ரெமோ
அவ்வை ஷண்முகி படத்தினை போல சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு இந்த படத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளிவர படத்தின் ஃபர்ஸ்ட்லுகிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.Cupid அம்பு விட ஸ்மார்ட்டாக தாடியோடு இருக்கும் SK ஷேவ் செய்து நர்ஸ் கெட்டப்பில் மாற , பின்னணியில் அனிருத் இசை ஆர்ப்பரிக்க இந்த மோஷன் போஸ்டர் பெரிய ஹிட் அடித்தது
ஜகமே தந்திரம்
பேட்ட இயக்குனருடன் தனுஷ் இணைகிறார் என்றும் இந்த படத்தில் ஹாலிவுட் பிரபலம் நடிக்கிறார் ஒரு டான் படம் என படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புக்கிடையே , இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியானது.பல தாதாக்களுக்கு நடுவே தனுஷ் வேஷ்டி சட்டையில் துப்பாக்கியுடன் வரும் இந்த மோஷன் போஸ்டர் செம ட்ரெண்ட் அடித்தது.
மாநாடு
சிலம்பரசனுடன் முதல் முறையாக வெங்கட் பிரபு இணையும் திரைப்படம்.அரசியல் சார்ந்த டைம்லூப் திரைப்படம் ,சிம்புவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் அத்துடன் பல சர்ச்சைகளை கடந்து உருவான திரைப்படம் என இந்த படத்தின் வரலாறு மிக பெரியது.யுவனின் அதிரடி இசையில் அரசியல் மாநாட்டில் ஸ்லிம்மாக சிம்பு வரும் அந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 42
சூர்யா இயக்குனர் சிவாவுடன் இணையும் முதல் திரைப்படம் ,வரலாற்று படமாக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.செம மாஸாக இருக்கும் இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்காக ஏற்றியுள்ளது
கோப்ரா
சீயான் விக்ரம் இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணைகிறார் என்ற அறிவிப்போடு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தது.மோஷன் போஸ்டரில் ரஹ்மானின் மிரட்டலான இசை இணைய படத்தின் மீதான எதிர்பார்ப்பினை வெகுவாக அதிகரித்தது.
சர்தார்
கார்த்தி இரும்புத்திரை இயக்குனர் பி எஸ் மித்ரன் உடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் வயதான வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் என்றும் தகவல் வந்தது.அப்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது
சென்னை 28 செகண்ட் இன்னிங்க்ஸ்
கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் , இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது என்ற அறிவிப்பை ஒரு பட்டையை கிளப்பும் மோஷன் போஸ்டருடன் அறிவித்தார் வெங்கட் பிரபு.யுவனின் BGM பக்கபலமாக இருக்க ரசிகர்களின் மனம் கவர்ந்த மோஷன் போஸ்டராக இது இருக்கிறது.
இப்படி படத்தின் மீதான அறிவிப்புகள் ரசிகர்களை கவரும்படி வித்தியாசமாக வந்த வண்ணம் உள்ளன.இனி வரும் பல முக்கிய படங்களுக்கும் வித்தியாசமான விறுவிறுப்பான பல மோஷன் போஸ்டர்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.