மலையாள சினிமாவில் மிக முக்கியமான இளம் இயக்குனர்களில் ஒருவர் பாசில் ஜோசப். துணை நடிகராகவும் உதவி இயக்குனராகவும் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்த பாசில். 2015 ல் குஞ்சுராமாயணம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின் அதனை தொடர்ந்து 2017 ல் கோதா திரைப்படத்தை இயக்கி அனைவருக்கும் பரிசையமானர். அதே நேரத்தில் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவும் செய்தார். அதன் பின் ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கடந்த 2021 ம் ஆண்டு ;மின்னல் முரளி’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பாசிலுக்கு பெற்று தந்தது. உலக தரத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளதால் பாசிலுக்கு பாராட்டு வந்த வண்ணம் இருந்தது. இதில் குறிப்பாக உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆசிய அக்காடமி விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். மேலும் வரும் பிப்ரவரி 17 ம் தேதி பாசில் நடித்த ‘எங்கிலும் சந்திரிகே’ என்ற படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனக்கே உரித்தான நடிப்பு மற்றும் இயக்குனர் திறன் அதிகளவு ரசிகர்களால் பேசப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு திரையரங்குகளில் பாசில் நடிப்பில் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய’ திரைப்படம் வெளியானது. இந்த படமும் பாசிலுக்கு வெற்றியை கொடுத்தது. தொடர் புகழை சந்தித்து வரும் பாசிலுக்கு மேலும் இன்பம் அளிக்கும் அளவு ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
பாசில் ஜோசப் அவரது மனைவி எலிசபெத் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இதனையடுத்து தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இன்ப செய்தியை தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் பாசில். அதனுடன், “எங்கள் குட்டி தேவதை, ஹோப் எலிசபெத் பாசில் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி.. அவள் ஏற்கனவே எங்கள் இதயங்களை திருடி விட்டாள். நாங்கள் எங்கள் மகளின் விலைமதிப்பற்ற அன்பால் நிலவுக்கு மேல் இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் அவள் வளர்வதை பார்த்து அவளை புரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடிகை நஸ்ரியா, நடிகர் துல்கர் சல்மான், இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பாசில் – எலிசபெத் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பாசில் பதிவின் கீழ் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.