கடந்த 2019 ல் இயக்குன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கைதி’. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து அர்ஜுன் தாஸ், நரேன், தீனா, ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், கன்னா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஒலிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருப்பார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது இரண்டாவது திரைப்படமாக உருவான கைதி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர், உலகநாயகன் கமல் ஹாசனுடன் ‘விக்ரம்’ ஆகிய திரைபடங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானர்.
மேலும் கைதி திரைப்படத்தின் மூலமாக தான் இன்று விக்ரம் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘LCU’ தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிரது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் கூட்டணியில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கைதி 2 இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி 2 குறித்து ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் கைதி கார்த்தி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் இயக்குனர் லோகேஷ் கனகாஜின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் கைதி 2 வில் நடிக்கவுள்ளாரா என்ற தகவலும் பரவி வந்தது. இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப. அதற்கு மகேந்திரன், “இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கணும், அதுக்கு அண்ணன் பார்ட் 2 பண்ணனும்.. அப்படி எங்க அண்ணன் ஒரு தரமான சம்பவம் பண்ணா அது வேற ஒன்னு தான் இருக்கும் அது ரொம்ப ரொம்ப பெருசாதான் இருக்கும்.. சும்மா கும்முன்னு இருக்கும்” என்று ரசிகரின் பதிவை பகிர்ந்து பதிலளித்துள்ளார்.
கைதி கெட்டப்பில் மாஸ்டர் மகேந்திரன் இருக்கும் புகைப்படம் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. தற்போது மாஸ்டர் மகேந்திரன் அவர்களின் பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.