திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வருவபர் அருண் அலெக்சாண்டர். சென்னையை சேர்ந்தவர் அருண் அலெக்சாண்டர், கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக இருந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், 2018-ம் ஆண்டு நெல்சன் திலீப்குமாரின் கோலமாவு கோகிலா, கடந்த ஆண்டு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அருண் அலெக்சாண்டர். லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் அருண் அலெக்சாண்டர்.
நேற்று அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அருணுக்கு வயது 48. அருண் அலெக்சாண்டர் இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரையுலகை சேர்ந்தவர்கள் ஏன் திடீர் என்று மாரடைப்பால் இறக்கிறார்கள் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவருடைய மறைவு குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நீங்க இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போவீர்கள் என்று நினைக்கவில்லை அண்ணா. என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு மாற்றே கிடையாது. என்றுமே என் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள் அண்ணா என்று லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ளார்.
கொரோனா எனும் கொடிய வைரஸ் ஒருபுறம் சினிமா துறையை புரட்டி போட்டாலும், நடிகர்களின் இறப்பு செய்தி மறுபுறம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த 2020-ம் ஆண்டு திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ராசி இல்லாத ஆண்டாக அமைந்துள்ளது. ஹாலிவுட் துவங்கி பாலிவுட் மற்றும் கோலிவுட் வரை பல துக்க செய்திகள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளது. வரும் 2021-ம் ஆண்டாவது மக்களும் நல்ல ஆண்டாக இருக்கவேண்டுமென்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.