தமிழ் சினிமாவில் அழுத்தமான கதையை வெகுஜன மக்களுக்கு பிடிக்குமளவு நேர்த்தியான திரைப்படமாக கொடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ். அவருடையை முந்தைய திரைப்படங்களான பரியேரும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிப்பில் கலைபுலி எஸ் தாணு தயாரிக்கும் கபடி கதைக்களம் கொண்டுள்ள படத்தில் பணியாற்றி வருகிறார். அதை தொடர்ந்து சொந்த தயாரிப்பில் ‘வாழை’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த ஜூன் மாதம் ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்ட் ஆனது குறிப்பிடதக்கது. கொண்டாட்டங்களுடன் வெளியான மாமன்னன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இன்னும் கொண்டாடப் பட்டும் வருகிறது. மேலும் மாமன்னன் படம் குறித்து திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் தங்கள் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது வாரத்தில் மாமன்னன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது வாரத்தில் மாமன்னன் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,
“மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 456 க்கும் அதிகமான திரையரங்குகளிலும் இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250 க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாமன்னன்னை மெகா பிளாக் பஸ்டராக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும் நன்றியும்..” என தெரிவித்துள்ளார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு இனையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
மேலும் தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் டப் செய்யப் பட்டு ‘மகாவீரடு’ என்ற பெயரில் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.