திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தரமான சமூக நீதி படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மாரி செல்வராஜ், தனது முதல் படமாக இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படமே மிகப்பெரிய பாதிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது படத்தில் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய கர்ணன் திரைப்படம் இன்னும் பெரிய பாதிப்பையும் வசூல் ரீதியில் பெரும் வெற்றியையும் பெற்றது. அடுத்து தனது சொந்த தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நான்கு சிறுவர்களை கொண்ட கதைக்களமாக மாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கும் இந்த வாழை திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக முதல் முறை நடிகர் சீயான் விக்ரமின் மகனும் பிரபல இளம் நடிகருமான துரு விக்ரமுடன் முக்கிய படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இணைகிறார். மனத்தி P.கணேசன் என்ற கபடி விளையாட்டு வீரரின் பயோபிக் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாத இறுதியில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி படம். வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது திரைப்பயணத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருப்பது ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாஸில், புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் களமிறங்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையும் கைகொடுத்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் இடையே ஏதோபித்த வரவேற்பை பெற்று தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது வெற்றிக்கு மிக முக்கிய பலமாக அமைந்த வைகைப்புயல் வடிவேலு அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவினர், அவருக்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூலை 27ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…