கடந்த ஜூன் 29ம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அழுத்தமான அரசியல் கதைகளத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, பகத் பாசில், லால், விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து வழங்கிய இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வராஜ் ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் ஆஸ்கர் நாயகன் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடம் இருந்து வந்தது. பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படம் என்ற மிகுந்த எதிர்பார்ப்பும் படத்தின் மீதான ஆவலை அதிகரித்தது. அதன்படி மாமன்னன் திரைப்படம் உருவாகி கடந்த மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. ஜனரஞ்சகமான திரைப்படம் மூலம் சமூக கருத்துகளை பேசும் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படமான மாமன்னன் படத்திற்கு பரவாலக நேர்மறையான விமர்சனங்களுடன் பாராட்டுகளும் குவிந்தது.
மேலும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்தனர். ரசிகர்களின் பேராதரவுடன் வெளியான மாமன்னன் திரைப்படம் வெளியாகி மாதம் கடந்தாலும் இன்றும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் தமிழில் ரசிகர்கள் அளித்த வரவேற்பையடுத்து மாமன்னன் படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து ‘நாயகுடு’ என்ற பெயரில் வெளியிட்டனர் படக்குழு. தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று மாமன்னன் படம் வெற்றியடைந்துள்ளது. இதுவரை மாமன்னன் திரைப்படம் உலகளவில் ரூ 75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல். தற்போது மாமன்னன் திரைப்படம் பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ்ல் இன்று முதல் ஒளிப்பராபாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் யுகபாரதி வரிகளில் உருவான கொடி பறக்குற காலம் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது கொடி பறக்குற காலம் பாடல் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மாமன்னன் வெற்றியையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. அதையடுத்து மாரி செல்வராஜின் சொந்த தயாரிப்பில் ‘வாழை’ என்ற திரைப்படம் வெளியகவுள்ளது குறிப்பிடதக்கது.