உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 9 லட்சம் நபர்களுக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் உலக அளவில் 13 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் செய்தி தொலைக்காட்சியில் கொரோனா எண்ணிக்கை பற்றிய செய்திகள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது. இந்த நிலை மாறி இயல்பு நிலை திரும்பாதா என்ற ஆவலில் மக்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸிடம் இருந்து சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நேற்று சாரா அலி கானின் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இப்படியிருக்க மங்காத்தா படத்தில் நடித்த ரேச்சல் ஒயிட் என்பவருக்கும் குரானா தொற்று இருப்பது டெஸ்டில் உறுதியாகியுள்ளது. தல அஜித்தின் 50-வது படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம் இன்று வரை தல ரசிகர்கள் கொண்டாடும் படமாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, மஹத், பிரேம்ஜி, அஸ்வின் காகுமனு, வைபவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மச்சி ஓப்பன் தி பாட்டில் பாடலில் நடனமாடியிருப்பார் ரேச்சல்.
கொரோனா பாசிட்டிவ் காரணமாக, வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்ட அவர், இது பற்றி ட்விட்டரில் இரண்டு நாட்கள் முன்பு பதிவு செய்திருந்தார். அதில் எனக்கு கோவிட்-19 டெஸ்ட் பாஸிட்டிவ் என வந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் குணமடைய வேண்டுமென உங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்திருந்தார்.
தற்போது அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், எனக்கு கொரோனா பாதித்திருப்பதை ஏற்றுக்கொள்வதற்கு 2 நாட்கள் ஆனது. நான் எப்போதும் கூடுதல் கவனமுடன் இருப்பேன் என்பதால் இந்த தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு கொரோனாவா ? என்ற கேள்வி எழுந்தது.
நமக்கு வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் சொல்லும் அனைத்தையும் முறையாக கடைபிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ரேச்சல் ஒயிட். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள். வைரஸ் தான் குழம்பியுள்ளது, நாம் தெளிவாக இருப்போம் என்றும் பதிவு செய்துள்ளார்.
முறையான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும், மெடிக்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ரேச்சல். கொல்கத்தாவில் வசித்து வரும் ரேச்சல், விரைவில் குணம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் அவரது பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.