கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் சரத்குமார், ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது என்று தெரிகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் தோன்றி, ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று லைவ்வில் தோன்றிய இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், 10-ம் நூற்றாண்டில் நடக்கும் படத்தை எடுப்பதால், குறிப்பாக சண்டை காட்சிகளுக்கு அதிக ஜூனியர் ஆர்டிஸ்டுகள் தேவைப்படும். தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், விரைவில் இயல்பு நிலை வரவேண்டும். மீதம் உள்ள காட்சிகளை எடுக்கவேண்டும் என்று கூறினார். மேலும் நிலைமையை புரிந்து கொண்டு நடிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.