இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தமிழ் திரையுலகில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா தயாரிப்பில் உருவான இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த இந்த பிரம்மாண்ட படைப்பின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. ரசிகர்களை காட்சிக்கு காட்சி பிரம்மிப்பை வழங்கி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் ஆரவராத்துடன் வெளியான திரைப்படம் உலகளவில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றிகரமாக இன்னும் பல தீரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் அடிப்படையில் உலகளவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து வருகின்றது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்று இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்று ரசிகர்களை மெய்மறக்க செய்த அகநக பாடலின் முழு வீடியோவினை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இடம் பெற்றுள்ள காட்சி ரசிகர்களிடம் அதிகளவு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் காட்சிகளுடன் கார்த்தி, த்ரிஷா இணைந்து வரும் காட்சிகளின் தொகுப்பாகவும் இந்த வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான அகநக பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுத இப்பாடலை பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். அகநக பாடல் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலம். முன்னதாக வெளியான லிரிக்கள் வீடியோ இணையத்தில் 29 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.