திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ்பவர் சூர்யா. மேடைகளில் மனதில் பட்டதை பேசுவது, நேர்மையான விஷயங்களுக்கு ஆதரவு தருவது என தனக்கென்று தனி பாணியை வைத்துள்ளார் சூர்யா. தனது அகரம் மூலம் மக்களுக்கு தீவிரமாக உதவி செய்து வருகிறார். அதிலும் ஏழை மக்களின் கல்விக்காக தீவிரமாக நிதி உதவிகளை செய்து வருகிறார்.இவர் மூலம் உதவி பெற்றுக்கொண்ட பலர், வெவ்வேறு மேற்படிப்புகளில் படித்து முன்னேறி இருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா செய்த உதவி மூலம் கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் டாக்டரானது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் டாக்கில் இருக்கும் இந்த செய்தியை பற்றி பார்ப்போம். பத்து வருடம் முன் நிகழ்ந்த சம்பவம் இது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அதில் ஏழை மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 10 வகுப்பு மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டனர்.
இதை கேட்கும் சூர்யா அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். பொதுவாக இது போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் TRP-காக சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அந்த நிகழ்ச்சியில் உண்மையில் ஏழை மாணவர்களை தேடி சென்று உதவியது. இதில் கலந்து கொண்டவர் தான் நந்தகுமார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அரசு பள்ளி மாணவர். எல்லோரையும் போல இவரும் அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டிருந்தார். நான் 12ம் வகுப்பு படித்துவிட்டேன். ஆனால் மேல்படிப்பு படிக்க பணம் இல்லை என்று கூறினார்.
அதற்கு சூர்யா அந்த நிகழ்ச்சியில் உங்களின் மார்க் என்ன ? நான் 1160 மார்க் எடுத்து இருக்கிறேன். மெடிக்கல் கட் ஆஃப் 199. ஆனால் மருத்துவம் படிக்க காசு இல்லை என்று கூறினார். தீவிரமாக படித்து இவ்வளவு மார்க் எடுத்தேன் என்றார். உடனே சூர்யா அவரிடம் உங்களின் குடும்ப சூழ்நிலை குறித்து விவரியுங்கள் என்று கேட்டார்.
அதற்கு நந்தகுமார் கண்ணீர் விட்டபடியே, என் அப்பா, அம்மா இருவரும் கூலி தொழிலாளிகள். வீட்டில் மின்சாரம் கூட இல்லை. தெரு விளக்கில்தான் படித்தேன். சத்துணவு சாப்பாடு மட்டும்தான் ஒரே சத்தான உணவு. படிப்புமட்டும்தான் எனக்கு ஒரே நம்பிக்கை. அதன்பின் நந்தகுமாரின் அம்மாவிடம், அவரின் மகன் குறித்து கேட்டார் சூர்யா. என் மகனுக்கு டாக்டர் ஆக ஆசை. ஆனால் எங்களுக்கு காசு இல்லை என்று கூறினார். நந்தகுமாரும், எனக்கு டாக்டர் ஆக ஆசை சார், என்று குறிப்பிட்டார். இதை கேட்டு உடைந்து போன சூர்யா, கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வேன். உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டருக்கு படிப்பான் என்று அந்த மேடையில் சூர்யா உறுதி அளித்து இருப்பார்.
அதேபோல், நடிகர் சூர்யா அந்த வருடமே தான் சொன்னபடி, அந்த மாணவர் நந்தகுமாருக்கு உதவி செய்தார். அவரை சென்னை எம்எம்சி மருத்துவ கல்லூரியில் சேர அகரம் மூலம் நிதி உதவி அளித்தார். அவர் படித்து முடிக்கும் வரை அனைத்து வகையான கட்டணம் மற்றும் நிதி தேவைகளையும் சூர்யாவே ஏற்றுக்கொண்டார். தற்போது மருத்துவம் படித்துவிட்டு, பெரம்பலூரில் இவர் டாக்டராக இருக்கிறார். சூர்யாவின் இச்செயலை திரை ரசிகர்கள் தவிர்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஒருவர் வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு. இதை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் சூர்யா நிஜ வாழ்விலும் ஹீரோ தான்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு அருவா, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.