நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த மலையாள படமான காதல் - தி கோர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் நடிகர் மம்மூட்டி உடன் இணைந்து முதல்முறையாக நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் மலையாள படமான காதல் தீ கோர் திரைப்படம் வருகிற நவம்பர் 23ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி காதல் - தி கோர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி மற்றும் ஜோதிகா உடன் இணைந்து லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி, சுதி கோழிக்கோடு, அனகா அக்கு உள்ளிட்டோரும் காதல் - தி கோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து காதல் - தி கோர் திரைப்படத்தில் கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, காதல் - தி கோர் படத்திற்கு மேத்யூஸ் புலிக்கண் இசையமைக்கிறார்.
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் மம்மூட்டி அவர்கள் இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கமாலி டைரி & ஜல்லிக்கட்டு படங்களின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடித்து வெளிவந்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து பிப்ரவரியில் மம்மூட்டின் நடிப்பில் வெளிவந்த கிரிஸ்டோபர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விறுவிறுப்பான திரில்லர் படமாக மம்மூட்டி அவர்கள் நடிப்பில் வெளிவந்த கண்ணூர் ஸ்குவாட் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கடுகன்னவா, யாத்ரா 2, டர்போ, பிரம்மயுகம், பஸூகா ஆகிய படங்கள் அடுத்தடுத்து மம்முட்டி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹொவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்காக 36 வயதினிலே படத்தில் நடித்து சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகை ஜோதிகா தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதை களங்கள் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஜோதிகா, "ஸ்ரீ" எனும் சூப்பர் நேச்சுரல் திரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே முதன்முறையாக நடிகர் மம்மூட்டியுடன் இணைந்த ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் தான் காதல் - தி கோர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2022 நவம்பர் மாதத்திற்குள் காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.