தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் மஹத். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பில் ஈர்த்திருப்பார். பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். சென்னை 28 - 2, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது இயக்குனர் மேக்வென் இயக்கத்தில் இவன் தான் உத்தமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. தமன் இசையமைக்கும் இதற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இதனை பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரிக்கிறார். சமீபத்தில் நடிகர் மஹத்தின் திருமணம் நடைபெற்றது. தனது காதலியான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்தார். மஹத்தின் திரை வட்டார நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த தம்பதியை வாழ்த்தினர். STR, அனிருத் போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சினிமா சார்ந்த தொழில்கள் அனைத்தும் முடங்கியது. தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக அவர்களது சுமையை குறைக்கும் விதமாக தனது ஊதியத்திலிருந்து 50 சதவீதத்தை குறைத்து பெற்றுக்கொள்வதாக நடிகர் மஹத் தெரிவித்தார். மஹத்தின் இந்த முடிவை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் நடிகர் மனோபாலாவுடன் தனது திரைப்பயணம் குறித்தும், சக நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொண்டார் மஹத். ரசிகர்களின் அபிமானம் பெற்ற மனோபாலாவின் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தவர், சினிமா துறையில் இருக்கும் நெபோட்டிசம் குறித்தும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், சுஷாந்தின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது. கிட்டதட்ட ஒரு வாரம் அதே செய்தி தான் நினைவில் இருந்தது. நானும் டிப்ரஷனில் இருந்துள்ளேன். வாழ்க்கையின் கஷ்டமான பகுதியை கண்டுள்ளேன். டிப்ரஷன் காரணமாக சுஷாந்த் எடுத்துக்கொண்ட மாத்திரைகளை நானும் எடுத்திருக்கிறேன் (பிக்பாஸ் முன்பு). அவரது ஆத்மா சாந்தியடையட்டும். நெபோட்டிசம் பற்றி பேசுகையில், பாலிவுட்டில் பிறருக்கு வாய்பளிக்காமல், வாய்ப்பை தட்டி பறித்து, அவர்களின் படங்களை வெளியிடாமல் செய்வது போன்ற விஷயங்கள் அதிகமாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். எதையும் முழுதாக புரிந்து கொள்ளாமல், நன்கு விசாரிக்காமல் முடிவு செய்ய முடியாது. தமிழ் சினிமாவில் அதுபோன்ற விஷயங்கள் இல்லை. வாழு வாழ விடு என்பது தான் பாலிசி என்று பேசியுள்ளார் மஹத்.