இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.
மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டார் மாதவன். சுமார் 400 விமானங்கள் அந்த தளத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். மாதவன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் இசை குறித்த ருசிகர தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் ரீரெகார்டிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மாசிடோனியன் சிம்பனி ஆர்செஸ்ட்ரா கொண்டு பின்னணி இசை பணிகளை நடத்தி வருகின்றனர். இதை இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தனது ஸ்டுடியோவில் இருந்து கவனித்து வருகிறார்.
பயோபிக் என்பதால் படத்தின் இசை ஆழமான எமோஷன்ஸை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அற்புதமான பின்னணி இசையால் திரை ரசிகர்களை ஈர்த்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். விக்ரம் வேதா, கைதி போன்ற படங்களின் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருப்பார். தற்போது சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை, விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் 800 போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா படத்தில் நடித்துள்ளார் மாதவன். இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன் நடித்த சைலன்ஸ் திரைப்படம் இம்மாதம் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா ஷெட்டி முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்தனர். மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெவ்வேறு மொழிகளில் வெளியானது.