தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து குறிப்பிடப்படும் படைப்புகளை தயாரித்து வருகிறது Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம். அந்த வகையில் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க தமிழ் சினிமாவின் முதல் முழு நீள SPOOF திரைப்படமாக வெளிவந்த தமிழ் படம் திரைப்படத்தை தனது Y Not ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து தயாரிப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார் தயாரிப்பாளர் S.சசிகாந்த். தொடர்ந்து மீண்டும் மிர்ச்சி சிவா உடன் வா மற்றும் தமிழ் படம் 2, சித்தார்த்துடன் காதலில் சொதப்புவது எப்படி & காவியத்தலைவன், துல்கர் சல்மானின் வாயை மூடி பேசவும், மாதவனின் இறுதிச்சுற்று, இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா, டாப்ஸியின் கேம் ஓவர், இயக்குனர் ஹலிதா சமீமின் ஏலே, யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா, தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளிவந்த ஜகமே தந்திரம், விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் மற்றும் தலைகூதல் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரிப்பாளர் S.சசிகாந்த் அவர்களின் தயாரிப்பில் இதுவரை வெளிவந்துள்ளன.
தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும் இயக்குனர் தியாகராஜன் குமார ராஜாவின் சூப்பர் டீலக்ஸ், தனுஷின் ஹாலிவுட் அட்வென்ச்சர் திரைப்படமான பக்கிரி, கே.டி., என்கிற கருப்புத்துரை, ஜடா, வானம் கொட்டட்டும், கடைசியில பிரியாணி மற்றும் பாலிவுடில் வெளிவந்த 83 ஆகிய திரைப்படங்களை S.சசிகாந்த் தனது Y NOT ஸ்டுடியோ சார்பில் வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் S.சசிகாந்த் அவர்கள் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். Y NOT ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் S.சசிகாந்த் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதல் முறை இயக்குனராக களமிறங்கும் தயாரிப்பாளர் S.சசிகாந்த் இயக்கத்தில் உருவாகும் தி டெஸ்ட் திரைப்படம் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிவிக்கும் வகையில் தற்போது வெளிவந்துள்ள மோஷன் போஸ்டரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தும் பந்துகளும் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவார சத்தமும் கேட்பதால் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. தி டெஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக படக் குழுவினர் அறிவித்துள்ள நிலையில், இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹிந்தியில் வந்த ரங்குதே பசந்தி மற்றும் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது தி டெஸ்ட் திரைப்படத்திலும் இருவரும் இணைந்து இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது. இந்த தி டெஸ்ட் திரைப்படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர் இதோ…