ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் vibe செய்ய வைக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய அசத்தலான ஆட்ட திறமையை சின்னத்திரையில் இருக்கும்போதே வெளிக்காட்டி ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். திரையுலகில் ஆரம்பகாலக் கட்ட திரைப்படங்களிலிருந்து சமீபத்திய சிவகார்த்திகேயன் திரைப்படம் வரை சிவகார்த்திகேயனின் ஆட்டம் திரையரங்கை அதிர வைக்கும். அந்த வகையில் அவரது திரைப்படங்களில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் அளவு ஒரு குத்து பாடல் இடம் பெறுவது வழக்கம். அதன் படி அவரது முந்தைய திரைப்படமான டான் திரைப்படத்தில் அனிரூத் இசையில் ‘ஜலபுலஜங்கு’ பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது ஷோபி நடன வடிவமைப்பில் சிவகார்த்திகேயனின் ஆட்டம் திரையரங்கை அதிர வைத்தது. சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருடைய முந்தைய திரைப்படமான ‘பிரின்ஸ்’ எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாவீரன் திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாவீரன் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று அதனை கொண்டாடும் விதத்தில் மாவீரன் திரைப்படத்திலிருந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. பரத் சங்கர் இசையில் அனிரூத் பாடிய இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார் பிரபல பாடலாசியர் கபிலன் மற்றும் ரோகேஷ். அரசு அடுக்குமாடி குடியிருப்பின் வாழ்வாதாரத்தை அட்டகாசமான பாடலுடன் சிறப்பாக கொடுத்துள்ளார்.
Vibe இசையில் அசத்தலான பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இப்பாடலில் சிவகார்த்திகேயன் 50 பேர் கூட்டத்தின் நடுவே குத்தாட்டம் போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு அட்டகாசமாக நடன வடிவமைப்பு செய்துள்ளார் சோபி மாஸ்டர். சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வரும் இந்த நிலையில் வெளியான “Scene ah Scene ah” பாடலை தற்போது ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு, திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.