திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்டோர் நடித்து இன்று அமேசான் ப்ரைமில் வெளியான திரைப்படம் மாறா. மலையாளத்தில் ஹிட்டான சார்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காகும். ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதி முக்கிய ரோலில் நடித்துள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர்.
பார்வதி என்கிற பாரு (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) சிறுவயதில் பாட்டி, அம்மாவுடன் பேருந்தில் செல்லும்போது கதை கேட்டு அடம் பிடிக்கிறார். ஒரு ஊர்ல ஒரு ராஜா, நரிக் கதை என்றே பாட்டி கதை சொல்கிறார். அது பாருவுக்குப் பிடிக்கவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர், சிப்பாயி கதையைச் சொல்கிறார். அது பாருவின் மனதில் ஆழப் பதிகிறது. அந்தக் கதையை மட்டும் அவர் மறக்கவில்லை.
பழமையான கட்டிடங்களை அதன் தன்மை மாறாமல் மறு சீரமைத்துப் பாதுகாக்கும் கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரியும் அவருக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வரன் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு விலகி வேறு ஊருக்குச் செல்கிறார். தோழியின் உதவியுடன் வாடகை எடுத்துத் தங்க வீடு பார்க்கிறார்.
சிறுவயதில் தான் கேட்ட கதையின் காட்சிகள் அங்கே ஓவியமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். அதற்குக் காரணமான மாறா (மாதவன்) இருந்த வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் உண்மைக் கதையின் சித்திரம் இருப்பதைப் பார்க்கிறார். ஆனால், அது பாதியிலேயே நிற்கிறது. கதையின் முடிவை அறிந்துகொள்ளும் ஆவலுடனும், மாறாவைச் சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அவரைப் பற்றிய விசாரணையை அவருக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, தன் தேடல் பயணத்தைத் தொடர்கிறார். இதுதான் மாறா படத்தின் கதைக்கரு.
படத்தின் புதிய ரொமான்டிக் ப்ரோமோ காட்சி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ராக்கெட்ரி படத்தை ரிலீஸுக்கு வைத்துள்ளார் மாதவன். இந்த படத்தில் தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். சென்ற லாக்டவுனில் திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.