பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்த முக்கிய படைப்பாக வெளிவரவிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் இயக்குனர் மாரி செல்வராஜ், வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் என கலந்து கொண்ட மாமன்னன் பட குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக தன்னுடைய வலிகள் தான் தன்னை கதைகளை எழுத வைப்பதாகவும் உச்சகட்ட வழியில் தான் ஒவ்வொரு படங்களுக்கான கதைகளையும் எழுதுவதாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவரிடம், “கீர்த்தி சுரேஷ் அவர்கள் சொன்னபடி, நீங்கள் இவ்வளவு வலியை எடுத்து வருகிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு படங்களையும் அந்த வலிகளுக்கான சிகிச்சைக்கான தருணமாக பார்க்கிறீர்களா? ஒவ்வொரு படம் எடுக்க எடுக்க அந்த வலிகள் வெளியே போகிறதா?" எனக் கேட்டபோது, “அதிகமாகிறது... மனைவி திட்டுவார்கள் இப்போது டாக்டரை கூட்டிக் கொண்டே போகிறார்கள்... முதலில் டாக்டர் நம்பர்களை எல்லாம் அழி.. முதல் முறை பார்த்த போது ஒரு டாக்டர் இருந்தார்கள் இப்போது 25 - 30 டாக்டர்கள் இருக்கிறார்கள். இது ஏன் அதிகமாகிறது என்றால் இப்போது அருகில் உதயநிதி சார் மற்றும் வடிவேல் சார் எல்லாம் இருக்கிறார்கள் அதனால் நான் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இப்போது இதை ரொம்பவும் எமோஷனலாக தான் சொல்கிறேன். இந்த சமூகமே ஒரு கண்ணாடியாலான சமூகம். எல்லா முரண்பாடுகளும் கண்ணாடிகளால் தான் இருக்கின்றன. உடைபட முடியாத முரண்பாடுகளே இங்கே கிடையவே கிடையாது. அப்போது நாமும் கல்லெறிப்பவனாகவும் ஆகி விடுகிறோம். இவன் கல்லெறிக்கிறான் என்கிறோம்.. ஆனால் நான் ஏன் கல்லெறிகிறேன் என்பதை புரிந்து கொள்ளப்பட வேண்டும்.”

என மாரி செல்வராஜ் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் குறுக்கிட்ட வைகைப்புயல் வடிவேல் அவர்கள், “இரண்டு காமெடி படம் எடுத்தால் சரியாகி விடும் வழி எல்லாம் குறைந்து விடும்... இதுதான் என்னுடைய பதில்..” என சொல்ல உடனே, “இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் டாக்டர் இவர்தான்” என வடிவேலு அவர்களை சுட்டிக்காட்டிய, மாரி செல்வராஜ் “இப்போது எனக்கு வலது புறம் ஒரு டாக்டர் இடது புறம் ஒரு டாக்டர்” என வடிவேலு அவர்களையும் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய வைகைப்புயல் வடிவேலு அவர்கள், “அவரது மனைவியே சொல்லிவிட்டார் பாருங்கள் நிறைய ரிஸ்க் எடுக்கிறார். இடையில் ஒரு இரண்டு மூன்று காமெடி படங்களை எடுத்து ஜாலியாக இருந்து விட்டு அடுத்த படங்களுக்கு போய்விட வேண்டியது தானே…” என பேச மொத்த நேர்காணலும் சிரிப்பொலியால் கலகலத்தது. இந்த முழு நேர்காணலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.