தமிழ் சினிமாவில் மிக முக்கிய திரைப்படங்களை கொடுத்து மிகப்பெரிய புகழை பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சுபாஸ்கரன் அவர்களின் லைகா தயாரிப்பு நிறுவனம். தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் மூலம் தமிழில் படங்களை தயாரிக்க தொடங்கிய லைகா. தொடர் வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வசூலில் கவனம் பெற்றது. மேலும் தரமான படங்களை கொடுக்கும் நிறுவனம் என்ற அடையாளத்தையும் இந்த தயாரிப்பு நிறுவனம் குறுகிய காலத்திலே பெற்றது. அதன்படி ‘வடசென்னை’, ‘எந்திரன் 2.0’, ‘தர்பார்’ ஆகிய படங்களை கொடுத்தது. கடந்த ஆண்டும் சிவகார்த்திகேயனின் ‘டான்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் தனி வெற்றி முத்திரையை பதித்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட படங்களை தாயரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் திரைப்படங்களாக ‘பொன்னியின் செல்வன் 2’ , ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’ திரைப்படங்கள் உள்ளன. மேலும் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘AK62’ திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள 24 வது படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி ‘திருவின் குரல்’ என்ற படத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் பாரதி ராஜா நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு. மேலும் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தி ன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முதல் பார்வை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அருள்நிதி வித்யாசமான தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் புகழ் பெற்றவர். இவர் படத்திற்கே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ‘டி பிளாக்’, ‘டைரி’, ‘தேஜாவு’ ஆகிய படங்கள் வெளியாகி கவனத்தை பெற்றது குறிப்பிடதக்கது. நிச்சயம் லைகா நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.