தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வரும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து நடிகராக அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.
தளபதி விஜயின் பிகில் படத்தை தயாரித்த, தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AGS என்டர்டெய்மென்ட் நிறுவனத்தின் 22 வது திரைப்படமாக வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படத்தில் இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட லவ் டுடே திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் லவ் டுடே திரைப்படத்தை தற்போது தெலுங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய்ள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் லவ் டுடே படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.