தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரலாற்றுச் சாதனையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை படைக்குமா என்ற கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிக சரியாக பதில் அளித்திருக்கிறார். இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாநகரம் திரைப்படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தனது அடுத்த படமான கைதி திரைப்படத்தில் இந்திய அளவில் கவனிக்க வைத்தார். இந்த மாநகரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகின. தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம் எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் உடன் மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக உருவாகி வரும் இந்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் பேசிய போது, “பாக்ஸ் ஆபிஸ் வசூல், கோடிக்கணக்கிலான சம்பளங்கள் இவற்றை விட சாமானிய மனிதர் 150 ரூபாய் கொடுத்து வாங்கும் டிக்கெட்டை பெருகும் மதிப்பதாகவும் அதற்காகத்தான் இத்தனை உழைப்பை கொடுத்து ஒரு படத்தை உருவாக்குவதாகவும் சினிமாவில் பணியாற்றுவதாகவும்” இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஜூலை 19ம் கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில், “நீங்கள் முன்பு சொன்ன மாதிரி 150 ரூபாய் பணம் கொடுத்து ஒருவர் படம் பார்க்க வருகிறார் என்றால் அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக தான் நான் உழைக்கிறேன் என்றீர்கள் அதை இனியும் நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? என கேட்டபோது, “அதைத்தான் நான் மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் இருக்கும் போது அதைத்தான் செய்ய வேண்டும் அதுதான் நியாயம். அவர்கள் கொடுக்கும் அந்த காசை தாண்டி பெரிய மரியாதை எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் அதைப் பண்ணும் போது நாம் அதற்கு நியாயமாக இருக்க வேண்டும். அந்த உற்சாகம் குறையும் போது நாம் சினிமா பண்ணக்கூடாது. அதனால்தான் நான் பத்து படம் என சொல்லும்போது… நான் எதுவும் மிகவும் கலைத்துவமான படம் எல்லாம் எடுக்கவில்லை. நான் கமர்சியல் படங்கள் பண்ணுகிற ஒரு ஆள் தான். நான் இல்லாத இடத்தை வேறு ஒருவன் நிரப்புவார். எனவே பத்து படங்கள் என்பது என்னுடைய ஐடியா… பத்தாவது படத்தில் நான் அதை தெரிவித்து விடுவேன்.” என பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், “லியோ திரைப்படம் 1000 கோடியை தொடுமா?” என கேட்டபோது, “மீண்டும் சொல்கிறேனே எனக்கு அந்த 1000 கோடியை விட இந்த 150 ரூபாய் மிகவும் முக்கியம். எனவே அதற்கு நியாயமாக இருக்கிறேன். அந்த ஆயிரம் கோடி எல்லாம் தெரியாது” என பதிலளித்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.