தளபதி 67 அப்டேட் தளபதி 67 அப்டேட் என தொடங்கிய ரசிகர்களின் நீண்ட ஆர்வம் லியோ.. லியோ.. லியோ... என மிகப்பெரிய உருவமெடுத்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தளபதி விஜயின் லியோ படம் அடுத்த சில மணி நேரங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளி வருகிறது. தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக கொடிகட்டி பறக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் 5வது படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ, தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணிகள் உருவாகும் 2வது படமாகும். முன்னதாக வந்த மாஸ்டர் திரைப்படம் 50% தளபதி படம் 50% லோகேஷ் படம் என இருந்த நிலையில் இந்த முறை லியோ திரைப்படம் 100% லோகேஷ் படமாக வந்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ட்ரைலரும் அதை உறுதிப்படுத்தியது. பஞ்ச் வசனங்கள்... ஓபனிங் பாடல்கள்... ஓபனிங் சண்டைக் காட்சி என எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்த லியோ பக்கா ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என்பது பலன் ஒரு கருத்தாக இருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் இரவு எமோஷனலான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களோடு பணியாற்றிய அனுபவத்தை குறிப்பிட்டு விக்ரம் படம் பார்க்க வருவதற்கு முன்பு கைதி படம் பார்த்து வாருங்கள் என தெரிவித்திருந்தார். அதேபோல் இந்த முறை லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாளில் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் இருந்து அறிக்கை வெளிவரும் என்றும் அதில் விக்ரம் மற்றும் கைதி படங்களை பார்த்து வருமாறு தெரிவிக்கப்படும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் எதிர்பார்த்தபடி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,

லியோ திரைப்படம் வெளிவர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்த நொடி மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் நம்ப முடியாத நிலையிலும் உள்ளது. என் கண்ணோட்டத்தில் இருந்த அனைத்தையும் வெளிக்கொண்டுவர ஒரு தூணாக இருந்த என் அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் எல்லைக் கடந்த அர்ப்பணிப்பிற்கு என்றென்றும் என் மரியாதைகள்.
இந்தப் படத்தை உருவாக்க தங்களின் ரத்தத்தையும் வேர்வையும் சிந்தி அர்ப்பணிப்பாக வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக லியோ படத்தில் வேலை செய்து கொண்டிருந்தோம் இரவும் பகலும் பாராமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தோம் உங்களிடம் இதை சேர்ப்பதற்காக இந்தப் படத்தில் நான் வேலை பார்த்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றும் போற்றுவேன். இந்த படத்தில் அட்டகாசமாக பணியாற்றிய மொத்த படக்குழு அனைவரிடமும் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
என் அன்பிற்குரிய ரசிகர்களுக்கு என் மீது நீங்கள் பொழியும் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. லியோ இன்னும் சில மணி நேரங்களில் உங்களுடையதாக போகிறது. திரையரங்குகளில் சென்று பார்த்து மகிழுங்கள். மேலும் அனைவரிடமும் ஒரு சிறிய வேண்டுகோள் படத்தைப் பார்த்துவிட்டு எந்த விதமான ஸ்பாயிலர்ஸையும் வெளியிடாதீர்கள். ஏனென்றால் இந்த படத்தில் இருந்து அனைவருக்குமே ஒரு சிறந்த அனுபவம் கிடைக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் லியோ LCUவின் அங்கமா இல்லையா என்ற உங்களின் கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரிந்து விடும்.

என தெரிவித்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த அறிக்கை இதோ…